பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட, திருவடி சாற்றப்பட்டது. ஈரோடு கோட்டையில், 1,300 ஆண்டுகள் பழமையான கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு சயன கோலத்தில் ஆதிஷேசன் மீதுள்ள மூலவர் சிலை, சுதை சிலையாகும். இதற்கு அபி?ஷகம் கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டும் நடக்கும். மூலவர், மூலவருடன் கருவறையில் உள்ள மகாலட்சுமி, பிரம்மா, தாயார் திருமேனிக்கு, வெள்ளியில் கவசம், திருமுடி, திருவடி என, பக்தர்கள் பலர் காணிக்கை தந்துள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்நாதன், ஏற்கனவே வெள்ளியில் திருவடி செய்து சாற்றியுள்ளார். தங்க முலாம் பூசிய திருவடியை, நேற்று சாற்றினார். முன்னாதாக கோவில் வளாகத்தில் உள்ள, கஸ்தூரி அரங்கநாதரின் மெய்காப்பாளர் விக்னசேனர் சன்னதியில், திருவடிகள் சமர்ப்பித்து, அவரின் அனுமதி பெறும் பூஜை நடந்தது. அனுமதி பெற்ற பின், திருவடிகளை கோவில் பட்டாச்சாரியார், தோளில் சுமந்து எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு யாகம், திருமஞ்சனம், பூஜைகள் முடித்து, மூலவர் பாதங்களில் சாற்றுமறை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.