திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2018 10:01
தஞ்சாவூர்: திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. தனித்தனியாக ஐந்து தேரில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோவில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றதால் நட்சத்திர தோஷம் நீங்கும் தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை மாலை சுவாமி வீதிவுலா நடைபெற்றது. பின்னர் நேற்று காலை முற்பகல் 11.30 மணியளவில் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தேனி ஓம்காரானந்தா சுவாமிகள் ஆகியோர் கொடியசைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரின் வடத்தினை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஐந்து தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு வீதிகளிலும் அசைந்தாடி மாலை நிலைக்கு வந்தது. தைப்பூச விழாவின் இறுதி நாளாக இன்று மதியம் 1.30 மணிக்கு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.