பதிவு செய்த நாள்
31
ஜன
2018
12:01
அவிநாசி :அவிநாசியை அடுத்துள்ள நடுவச்சேரியில், கோமளவல்லி உடனமர் கோடீஸ்வரர் சுவாமி கோவில் வளாகத்தில், வன தேவதையாக சிவளாபுரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முதலாமாண்டு விழா மற்றும் நவசண்டி மகாயாகம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடந்தன. தொடர்ந்து நவசண்டி யாக முதல் கால பூஜை துவங்கியது.
நேற்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாகனம், பஞ்ச கவ்ய பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து திரவ்யாகுதி நடத்தி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பிற்பகல், இரண்டாம் கால பூர்ணாகுதி நடத்தி, யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் கொண்டு சென்று, மூலவருக்கு கலச தீர்த்த அபிஷேகம் நடத்தி, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.