பதிவு செய்த நாள்
31
ஜன
2018
12:01
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலிருந்து திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.
அதன் பின் உற்சவருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வாணைக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா... கோஷமிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், இன்று காலை, 9:00 மணிக்கு வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலிருந்து பால்குடமும், நல்லகாத்து ஆற்றிலிருந்து வால்பாறை முருக பக்தர்களின் அலகு காவடியும் கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறது. காலை, 11:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.