பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
தைப்பூச நன்னாளான இன்று முருகனை தியானித்து இந்த வழிபாட்டை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே!பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சந்நிதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துர் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.
ஓம் முருகா: பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று அருளாளர்கள் புத்திமதி கூறுவர். அப்படிப்பட்ட நெஞ்சம் கொண்டவனே முருகன். சூரன் மாமரமாக நின்றான். வேலால் மரத்தை இருகூறாக்கி, ஒரு பகுதியை மயிலாக்கிதன் வாகனமாக்கிக் கொண்டார். மற்றொரு பகுதியை, சேவலாக்கி தனக்கு கொடியாக்கிக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் வாழ்வு கொடுத்து தன் அன்பராக்கும் பண்பு முருகனுக்கே உண்டு.
மணக்கோல திருத்தலம்: காலை வேளையில் கீழ்வானிலே இளஞ்சூரியனைப் பார்த்திருப்பீர்கள். இக்காட்சியைக் காண கன்னியாகுமரியில் பெருங்கூட்டம் காத்திருக்கும். அவர்கள் காண்கின்ற அக்காட்சியை, முருகன் மயிலில் வருகின்ற காட்சி என்கிறார் நக்கீரர். கடல்பரப்பில் இருந்து சூரியன், செவ்வண்ணத்தில் வட்ட வடிவமாக கிளம்பி வருகிறான். கடலின் நீலவண்ணப்பரப்பு தான் மயிலின் நீவண்ணத் தோகையாகும். இளஞ்சூரியன் தான் செவ்வேளான (சிவந்த நிறமுடைய) இளங்குமரன். இப்படி நாள்தோறும் உதிக்கும் செங்கதிராகிய சூரியனை முருகனாக திருமுருகாற்றுப்படையில் உவமை செய்கிறார். நக்கீரர், கன்னியாகுமரிக்கு இனி சுற்றுலா செல்லும் போது, சூரியனை நீலவண்ணமயிலில் எழுந்தருளும் முருகனின் தோற்றமாக கண்டு தரிசனம் செய்யுங்கள்.
ஞான பண்டிதன்: கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து சொன்னால் ஆறுமுகப்பெருமான் தன் பன்னிருகரங்களால் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவற்கொடியோன், குமரன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சிவகுரு என்று முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. இதில் சிறப்பு மிக்க மந்திரமாக சரவணபவ அமைந்துள்ளது. இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி(பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. சரவணன் என்றால் பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை சரவணப்பொய்கை என்றே சொல்வர்.