பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
கம்பம், ராயப்பன்பட்டி அருகே மலையடிவாரத்தில் உள்ள சண்முகநாதன் கோயிலில் இன்று நடக்கும் தைப்பூச திருவிழாவுக்காக பக்தர்கள் வாகனங்களில் செல்ல உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்யகோரி வனத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சண்முகநாதன் கோயில். இங்கு தைப்பூசம், பங்குனி, உத்திரம், கார்த்திகை உள்ளிட்ட விழா நாட்களில் ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி,சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரிசிப்பர்.
கோயில் அடர்ந்த வனத்தில் மேகமலை வனஉயிரின சரணாலய பகுதிக்குள் வருவதால், இதற்கு பக்தர்கள் செல்ல வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் சமீபத்தில் இந்த கோயில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு பின் தான் பிரச்னைகள் பெரிதானது. வாகனங்களை வனப்பகுதிக்குள் வனத்துறை அனுமதிக்காததால் பிரச்னை ஏற்பட்டது. கடந்த வாரம் கோயிலிற்கு செல்லும் பாதையை சீரமைக்கும் பணி செய்த பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் தடுத்துவிட்டனர்.
நீதிமன்றம் அனுமதி: இதற்கிடையே கோயில் கமிட்டி சார்பில் உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், கோயிலிற்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல அனுமதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த மாவட்ட உரிமையியல் முன்சீப் மணிவாசகம், தைப்பூச திருநாளான இன்று (ஜன. 31) ஒருநாள் மட்டும் பக்தர்கள் வாகனங்களில் சண்முகநாதன் கோயிலிற்கு செல்ல இடைக்கால அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி வனத்துறை சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை பிப். 3 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவால் இன்று இக்கோயிலிற்கு வாகனங்களில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார் என ரேஞ்சர் தினேஷ் அறிவித்துள்ளார்.