பதிவு செய்த நாள்
01
பிப்
2018
11:02
வடலுார்: சத்திய ஞான சபையில், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி.... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என்ற மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 147வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணி, 10:00; மதியம் 1:00; இரவு 7:00, 10:00 மணி, இன்று காலை 5:30 மணி என, ஆறு காலங்களில் கரும் பெருந்திரை, நீலப் பெருந்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை என ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி தரிசனத்தைக் காண திரண்டிருந்த பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என, மகா மந்திரத்தை முழங்கினர். விழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சன்மார்க்க சங்கங்கள் சார்பில், ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.