பதிவு செய்த நாள்
01
பிப்
2018
11:02
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி, இருமுடி விழா நடைபெறும். இந்த ஆண்டு, டிசம்பர், 13 ம் தேதி, இரு முடி விழா துவங்கி, நேற்று முன்தினம், நிறைவடைந்தது. தைப்பூச ஜோதி பெருவிழா, நேற்று துவங்கியது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை, 3:30 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையும் நடந்தன.
மூல விளக்கை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைத்தார். தைப்பூச ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து, தைப்பூச ஜோதி ஊர்வலம் துவங்கி, தைப்பூச ஜோதி மேடை அருகில் முடிந்தது. பாரம்பரிய கிராமியக்கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் ஏற்றி வைத்தனர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் அன்பழகன், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.