பதிவு செய்த நாள்
01
பிப்
2018
11:02
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு திருக்காவிரியில் நடந்தது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 22ம் தேதி, தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய மாரியம்மன், தெப்ப உற்சவம் கண்டருளினார். நேற்று காலை, கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழிநடை உபயம் கண்டருளிய மாரியம்மன், நொச்சியம் வழியாக, கொள்ளிடம் ஆற்றில் உள்ள திருக்காவிரி சென்று அடைந்தார். மாலையில், திருக்காவிரி யில் தீர்த்தவாரி கண்ட மாரியம்மன், இரவு, 11:00 மணி வரை, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து, வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பட்டுப்புடவை, மாலை உள்ளிட்ட பொருட்களை, மாரியம்மனுக்கு சீர்வரிசையாக கொடுத்தனர். இன்று திருக்காவரியில் இருந்து புறப்பாடாகும் மாரியம்மன், மண்ணச்சநல்லுார் வழியாக, வழிநடை உபயங்கள் கண்ட பின், ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.