பதிவு செய்த நாள்
01
பிப்
2018
12:02
பத்துமலை: மலேஷியாவில், பத்துமலை முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று, அலகு குத்தி, காவடி சுமந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழர்கள் அதிகளவில் வாழும், தென்கிழக்காசிய நாடுகளான, மலேஷியா, சிங்கப்பூரில், தைப்பூசம், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று, மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி, ஆயிரக்கணக்கான தமிழர்களும், பிற ஹிந்துக்களும், பத்துமலையில், 272 படிகள் ஏறி, முருகன் கோவிலுக்கு சென்றனர். பலர், முதுகிலும், கன்னத்திலும், நாக்கிலும் அலகு குத்தி, காவடி சுமந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்; பலர், பால் குடம் சுமந்து சென்று, முருகனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பத்து மலையில் ஏறுகையில், வழியில் உள்ள, உலகின் மிக உயரமான, 141 அடி முருகன் சிலையை, பக்தர்கள் வழிபட்டனர். இதுகுறித்து, தைப்பூச விழாவில் பங்கேற்ற பக்தர், விஜயலட்சுமி விமலன் கூறுகையில், ”கடந்த, 25 ஆண்டாக, தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று வருகிறேன். இறைவன் அருளால், எனக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. ”அதற்காக, முருகப் பெருமானுக்கு நன்றி கூற, பத்துமலை கோவிலுக்கு வந்துள்ளேன்,” என்றார். மலேஷியாவின், 3.1 கோடி மக்களில், பெரும்பாலானோர், முஸ்லிம்கள். இங்கு, 20 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.