பதிவு செய்த நாள்
01
பிப்
2018
12:02
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், தைப்பூச விழா, நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில் உள்ள, பழநி ஆண்டவர் கோவிலில், தைப்பூசத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை, உற்சவர் வீதியுலா வந்தார். நேற்று காலை மூலவர் தங்க கவசத்திலும், விநாயகர், அருணகிரிநாதர் வெள்ளி கவசத்திலும், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது. அதே தெருவில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், 16ம் ஆண்டு, தைப்பூச அன்னதான பூஜை நடந்தது. இதில், வீரபிரம்மேந்திர சுவாமி, திருவருட்பிரகாச வள்ளலார், பாலயோகி சுவாமி படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை, 6:00 மணிக்கு மங்கள இசையும், அதைதொடர்ந்து, இறை சொற்பொழிவு, பக்தி பாடல்கள் பாடப்பட்டன. காலை, 11:45 மணிக்கு, தீபஜோதி தரிசனமும், அன்னதானமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் வள்ளலார் பொது நிலைத் திருநெறிக் கழகம் சார்பில், 81ம் ஆண்டு, வள்ளலார் தைப்பூச விழா, முத்தீஸ்வரர் கோவிலில் நடந்தது. இதில், காலை, நாதஸ்வர இசையும், 11:00 மணிக்கு ஜோதி தரிசனமும், அதனைத்தொடர்ந்து, அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, டி.செல்வ அபிஷேக் கீ போர்டு இசை வாசித்தார். ஞானசம்பந்தரும், வள்ளலாரும் என்ற தலைப்பில், சு.சதாசிவம், சொற்பொழி வாற்றினார். செய்யூர் கந்தசுவாமி கோவிலில், தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டையில், 36ம் ஆண்டு தைப்பூச அறுமுடி யாத்திரை ஞானஜோதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு தைப்பூச விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் அறுமுடி ஏந்தி நடந்து வந்து முருகனை வழிபட்டனர். இதை தொடர்ந்து கோவிலுக்கு அருகே உள்ள ஞானகிரி மலை குன்று மீது ஞானஜோதி திருவிழா ஸ்ரீலஸ்ரீ ராதா கிருஷ்ண அடிகளார் தலைமையில் நடந்தது. பக்தர்கள் ஏந்தி வந்த அறுமுடி, நேர்த்தி குடம் ஆகியவற்றால் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் இரவு, 9:00 மணிக்கு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 11:30 மணி அளவில் மஹா தீபாராதனையுடன், ஞானஜோதி ஏற்றப்பட்டது. இதில், ஏராளமானோர் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, சொற்பொழிவு, பக்தி பாடல்கள், கலை நிகழ்ச்சி நடந்தது. 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் மதியம் வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை வழி பட்டனர்.
திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், தைப்பூச விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் செய்யப்பட்டன. தைப்பூசநாளில் கந்தபெருமானைக் காண காலை முதலே குவியத்துவங்கிய பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் அவரவர் வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின், சந்திர கிரகணத்தையொட்டி நடை பகல், 2:30 மணிக்கு அடைக்கப்பட்டது. இதேபோல, திருப்போரூரில் உள்ள பழமை வாய்ந்த செங்கழுநீர் அம்மன் கோவிலிலும் தைப்பூச விழா விமரிசையாக நடந்தது. இதில், பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.