பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
மோகனூர்: மாவட்டம் முழுவதும், தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்த மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச திருத்தேர் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை அபி?ஷகம்; மாலை, சுவாமி, அன்னம், ஆட்டுக்கிடா, பூதம், யானை, மயில், குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு, சுவாமி திருத்தேர் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக, காலை, காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், பால், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். சந்திரகிரகணத்தை முன்னிட்டு, மாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று, காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடக்கிறது.
* நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவில்; மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி கோவில்; கருங்கல்பாளைம், கரையான்புதூர் கருமலை, தண்டாயுதபாணி கோவில்; கடைவீதி சக்தி விநாயகர் கோவில் பாலதண்டாயுதபாணி சுவாமி ஆகிய கோவில்களில் சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது.
* நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன் குறிச்சியில், வேங்கை மரத்தில் செய்யப்பட்ட முருகன் பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை நடுவீதியில் உள்ள பழனிவேல் முருகன்; தொ.ஜேடர்பாளையம் முருகன்; பேளுக்குறிச்சி அடுத்த பழனியப்பர் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
* குமாரபாளையம், வீ.மேட்டூர் சூரிய கிரி மலை, சண்முக வேலாயுதசுவாமி, கரியபெருமாள் கோவிலில், 34ம் ஆண்டு காவடி கட்டு விழா நடந்தது. வட்டமலை முருகன், பாலமுருகன், தம்மண்ணன் வீதி தேவாங்கர் மாரியம்மன் முருகன், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* கபிலர்மலை, பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். மதியம், 2:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ப.வேலூர், பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு என, மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம் நடந்தது.