பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
கிருஷ்ணகிரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 81ம் ஆண்டு தைப்பூச விழா, கடந்த, 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, காவடி மற்றும் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகன் நகர் வலம் வந்தார். இந்த தேர் பவனி, சென்னை சாலை வழியாக, கிருஷ்ணகிரி ரவுண்டானா, பெங்களூரு சாலை, பழையபேட்டை வழியாக, மீண்டும் கோவிலுக்கு மாலை, 4:00 மணிக்கு சென்றடைந்தது. விழாவையொட்டி, நடந்த மாட்டுச் சந்தையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், நாட்டு மாடுகள் மற்றும் காளைகளை, விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இந்த மாட்டுச் சந்தை, வரும், 5 வரை நடக்க உள்ளது.
* தர்மபுரி அடுத்த இண்டூரில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 26ல் தைப் பூச தேர்த்திருவிழா நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பாலாபி?ஷகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப் பூசத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மதியம், 2:00 மணிக்கு, விநாயகர் ரதம் இழுக்கப்பட்டது. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.