பதிவு செய்த நாள்
01
பிப்
2018
02:02
பொள்ளாச்சி: ஆனைமலை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் குண்டம் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு குண்டம் திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, 29ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது.குண்டம் திருவிழாவுக்காக விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு, மேளதாளத்துடன் பூவோடு எடுத்து, ’அம்மா தாயே... மாசாணித்தாயே’ என கோஷமிட்டு, அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடனாக தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு சித்தரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, இன்று காலை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விழாவில், சிறப்பு அலங்காரத்தில் மாசாணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் விழாவுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஆனைமலை பஸ் ஸ்டாண்ட், அரசு மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.டி., மேல்நிலைப்பள்ளிகளில் பார்க்கிங் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மெயின் ரோடு, கோவில் ரோடு, குண்டம் இறங்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா, குடிநீர், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குண்டம் இறங்கும் இடத்தில் நெரிசலை தவிர்க்க, மரத்தடுப்புகள் அமைத்து, ஆண், பெண் பக்தர்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.குண்டம் இறங்குதல், சிறப்பு வழிபாடுகளை, எல்.இ.டி., டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டம் விழாவுக்காக, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.