பதிவு செய்த நாள்
01
பிப்
2018
02:02
தைப்பூசம் முன்னிட்டு, சூலுார், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். கருமத்தம்பட்டி, சென்னியாண்டவர் கோவில் மற்றும் குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், தேரோட்டம் நடந்தது.
கருமத்தம்பட்டி: விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், தைப்பூசத் தேரோட்டம் நேற்று நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு பகுதியில் அமைந்துள்ளது, சென்னியாண்டவர் கோவில். இக்கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா கடந்த, 22ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது; 23ம் தேதி கொடியேற்றப்பட்டது.நேற்று முன்தினம் மாலை, வள்ளியம்மை திருக்கல்யாணம் மற்றும் யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 10:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது. கருமத்தம்பட்டி, சோமனுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று பரிவேட்டை, குதிரை வாகன காட்சியும், நாளை மகா தரிசனமும் நடக்கிறது.
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் சுற்றுப்பகுதிகளில், தைப்பூச திருவிழாவையொட்டி, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள முருகன் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்குள்ள திருத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேரை, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் இழுத்துச் சென்றனர். வெள்ளக்கிணறுவில் உள்ள மருதாசலமூர்த்தி கோவிலில், முருகன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள், இங்குள்ள மண்டபத்தில் காவடிகளை வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். கணுவாய் கற்கிமலை ஈஸ்வரன் கோவிலில், தேர்த்திருவிழா நடந்தது. இதில், ஈஸ்வரன், ஈஸ்வரியுடன் ஸ்கந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துடியலுார் விருந்தீஸ்வரர் கோவில், பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம்: காரமடை அருகேவுள்ள, குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, ஜன., 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலை வள்ளி, தெய்வானையுடன் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். காலை, 10:00 மணிக்கு, குருந்தமலை சுற்றுப்பகுதிகளான கிட்டாம்பாளையம், க.புங்கம்பாளையம், தேக்கம்பட்டி, செல்லப்பனுார், அரசப்பனுார், மருதுார் பகுதி மக்கள் மேள தாளத்துடன் கோவிலுக்கு வந்தனர். மதியம், 12:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. குருந்தமலையை சுற்றி நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர், மதியம், 1:15 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மேட்டுப்பாளையம், காரமடையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அன்னுார்: பிரசித்தி பெற்ற குமரன்குன்று கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு கல்யாண சுப்ரமணிய சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை, 10:50 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தேரை இழுத்தனர். தேரின் மீது பக்தர்கள், பழங்களை வீசி, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். மேட்டுப்பாளையம், அன்னுார், காரமடை, சிறுமுகை பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, கோவில் சன்னதியில், பொதுமக்கள் முடி காணிக்கை அளித்தல், காவடி செலுத்துதல் நடத்துகின்றனர். தொடர்ந்து அபிேஷக பூஜை நடக்கிறது; அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு பரிவேட்டையும், நாளை இரவு தெப்போற்சவமும், வரும் 6ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது.