பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
திருமழிசை : திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், தையில் மகம் திருஅவதார மகோற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. வெள்ளவேடு அடுத்துள்ள, திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள பக்திஸார் எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ஆண்டுதோறும் நடந்து வரும், தையில் மகம் திரு அவதார மகோற்சவம், 22ம் தேதி துவங்கியது.
இதையடுத்து, தினமும்காலை, மாலை வேளைகளில் பல்வேறு பல்லக்கில், சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 5:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பின், காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடந்தது,முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், பகல் 2:10 மணிக்கு, கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, நேற்று மாலை, தோட்ட உற்சவம் நடந்தது. அதன் பின், இன்று, காலை, 10:00 மணிக்கு, சாற்று முறை உற்சவமும், மாலை, 6:00 மணிக்கு, திருச்சந்த விருத்த சாற்று முறையும், தொடர்ந்து தோட்ட உற்சவமும், இரவு, பெரிய மங்களகிரியும் நடைபெறும். வரும் 4ம் தேதி, விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.