பதிவு செய்த நாள்
26
டிச
2011
10:12
திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, கீழ் திருப்பதியிலிருந்து பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, இலவசமாக உணவு வழங்க, திருப்பதி தேவஸ்தானம் முடிவு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிப்பதற்கு இலவச தரிசனம் தவிர, 50 ரூபாய், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசனம் பார்ப்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 50 ரூபாய் கட்டண டிக்கெட்கள், திருமலையில் வழங்கப்படுவதில்லை. இவை கீழ் திருப்பதியில் மட்டுமே வழங்கப்படுகின்றன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள திருப்பதி தேவஸ்தான சேவை மைய அலுவலகங்களில், இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நேரடியாக திருப்பதி வரும் பக்தர்களுக்கு, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு, கீழ் திருப்பதியில் சீனிவாசா விடுதி அருகே, மொத்தம் 1,000 பேருக்கு 50 ரூபாய் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இது கிடைக்காதவர்கள், மேலே இலவச தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
நடந்து வந்தால் தரிசனம் உறுதி : இப்படி இல்லாமல், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலையேறி, பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் உடனடியாக (இரண்டு மணி ) கிடைக்கும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி., அனுமதி கடிதத்துடன் வரும் பக்தர்கள் தரிசனம் பார்ப்பதற்கு மூன்று மணி நேரமானால், பாதயாத்திரை பக்தர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் தரிசனம் கிடைத்துவிடும். அந்தளவிற்கு, பாதயாத்திரை பக்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடைமுறையை தேவஸ்தானம் நடைமுறைபடுத்திய பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாதயாத்திரையாக போனால் தரிசனம் உறுதி என்ற நம்பிக்கை, பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தையும் சமாளிக்க, பேருதவியாக இருக்கிறது. பஸ் கட்டணம் உயர்ந்த பிறகு, பல பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதையே விரும்புகின்றனர். இதையடுத்து, பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், முழு மனதுடன் திருப்தி அடையும் வகையில், விரைவாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
திருமலையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம், தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜூ மற்றும் அதிகாரிகளுடன் சென்று சோதனை மேற்கொண்ட அவர், அதிகாரிகளிடம் பேசுகையில் கூறியதாவது: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, இலவச டோக்கன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி மலைப்பாதை வழியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் சிலர், உணவுப் பொருட்களை பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பாதயாத்திரை வழியில் காளி கோபுரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகில், இலவச உணவு கவுன்டர்கள் ஏற்பாடு செய்து "சிற்றுண்டி வழங்குவது போன்று அன்ன பிரசாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விடுதியும் கிடைச்சா நல்லது : அலிபிரி வழியாக மலையேறும் பாதையில் அதிகமான கடைகள் உள்ளன. இக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதோடு, மலையேறும் படிக்கட்டுகள் மற்றும் நடைபாதையில் குப்பை அதிகமாக குவிகிறது. பிளாஸ்டிக் டப்பா மற்றும் கவர்களை போட்டு, சுற்றுச்சூழலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல காலமாக உள்ளது. மேலும், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கு,பொது விடுதி மட்டுமே உள்ளது. இவர்களுக்கு கட்டண விடுதிகள் கிடைப்பதில் முன்னுரிமை அளித்தால், பெரும்பாலான பக்தர்கள் பயனடைவர். இது பற்றியும் தேவஸ்தானம் கவனிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கை.
பக்தர்கள் வரவேற்பு : வைகுண்ட ஏகாதசிக்கு எப்போதும் இல்லாத வகையில், சென்னை போன்ற தேவஸ்தான சேவை அலுவலகங்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு 100 ரூபாய் டிக்கெட் வழங்கும் திட்டம், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் இந்த டிக்கெட் வாங்குவதற்காக, பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். தேவஸ்தானத்தின் இந்த முயற்சியை பலரும் பாராட்டினர்.