பதிவு செய்த நாள்
05
பிப்
2018
12:02
வடவள்ளி:மருதமலையில் பக்தர்களின் வசதிக்காக, லிப்ட் அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோவை மருதமலை முருகன் கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படுகிறது.
வெளிமாவட்டங்களில் இருந்தும், மருதமலைக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து அறநிலையத்துறைக்கு, மருதமலை கோவில் வாயிலாக, ஆண்டுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பஸ், மற்றும் வாகனங்களின் மூலம் அடிவாரத்தில் இருந்து மலை மேலே உள்ள பார்க்கிங் பகுதி வரை மட்டுமே செல்ல முடியும். அதன்பின், அனைவரும் படிக்கட்டு வழியாகதான் செல்ல வேண்டியுள்ளது. முதியோர் மற்றும் ஊனமுற்றோர், படிகளின் வழி ஏறிச் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். பழனி கோவிலில் உள்ளது போல், மருதமலையிலும் ரோப்கார் வசதி கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை, பக்தர்களால் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இங்கு லிப்ட் அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க, விரைவில் வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.