பதிவு செய்த நாள்
05
பிப்
2018
01:02
ஊத்துக்கோட்டை:ஆனையத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வெங்கல் அடுத்த, கீழானுார் கிராமத்தில் உள்ளது ஆனையத்தம்மன் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன், கோவிலை சீரமைக்கும் பணி துவங்கி, நடந்தது. பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 2ம் தேதி, காலை, கணபதி பூஜை, ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், முதல்கால யாக பூஜைகள் நடந்தன. மறுநாள், மாலை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. காலை, 10:30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.