பதிவு செய்த நாள்
05
பிப்
2018
01:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மலைவாழ் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பழமையான அம்மன் கோவில், புதுப்பிக்கும் பணிகளையொட்டி, கொடிகம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் வசித்து வரும் பழைய சர்க்கார்பதி உள்ளது. இப்பகுதியில், 360 ஆண்டுகள் பழமை வாய்ந்த குண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. மலைவாழ் மக்கள் ஆண்டுதோறும் விழா நடத்தி கொண்டாடி வருகின்றனர். ஆனைமலை மாசாணியம்மன் சகோதரியாக நினைத்து இந்த அம்மனை மலைவாழ் மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
பழமை வாய்ந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் முடிவு செய்தனர். இரண்டு நிலை விமானத்துடன் கூடிய கோவில் கட்டுவதற்காக, கடந்த, 2016ம் ஆண்டு ஏப்.,23ம் தேதி பூமிபூஜை போடப்பட்டது. மலைவாழ் மக்களுடன், சேவாலயம் அமைப்பினரும் இணைந்து கோவில் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவில் முகப்பு பகுதியில், கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 25 அடி உயரத்தில், கொடி மரம் தயார் செய்யப்பட்டது. இந்த கொடிமரம் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை, கொடி மரம் நிறுவ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ததேவனந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடந்தது. பரம்பரை கோவில் பூசாரி பொன்னுசாமி மூப்பன், பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.