பதிவு செய்த நாள்
27
டிச
2011
12:12
சென்னை:ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. புத்தாண்டு தினத்தில் வெள்ளி நாணய அலங்காரத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பன்று, வடபழனி கோவிலில் நடக்கும் விஷேச வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகனை தரிசிக்க வருவார்கள் என்பதால், இந்து சமய அறநிலையத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பழனி ஆண்டவர் கோவில் தெருவில், தெற்கு கோபுர வாயிலில் இரண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு வரிசையில் கட்டணமில்லா தரிசனமும், இரண்டாவது வரிசையில், 20 ரூபாய்க்கான கட்டணச் சீட்டு பெற்று தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிறப்பு வழியில் விரைந்து சிறப்பு தரிசனம் செய்வதற்கு வசதியாக நபர் ஒன்றுக்கு, 100 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்று, மேற்கு கோபுர வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். புத்தாண்டு தினத்தன்று, அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது. அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை, பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்யலாம். காலை 4 மணி முதல் பகல் 12 மணிவரை வெள்ளி நாணய அலங்காரத்திலும், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரத்திலும், மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் முருகன் அருள்பாலிக்கிறார். பெருமளவு பக்தர்கள் முருகனை வழிபட வருவார்கள் என்பதால், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் வகையில் மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவுள்ளனர். குடிநீர் வாரியம் பக்தர்களுக்கு குடிநீர் வசதியும், சென்னை மாநகராட்சி சுகாதார வசதியும் செய்யவுள்ளன. புத்தாண்டு தினத்தன்று, மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை வடபழனிக்கு இயக்கவுள்ளது.புத்தாண்டு சிறப்பு வழிபாடு குறித்து தனது அறிக்கையில் விளக்கியுள்ள இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் காவேரி, ""வடபழனி கோவிலில், தினமும் பகல் 12 மணிக்கு, 100 பேருக்கு அன்னதானமும், ஒவ்வொரு மாதமும் கிருத்திகையில், 500 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக கோவிலில் தொடர்பு கொண்டு, உரிய தொகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அன்னதானம் என்ற பெயரில் தனி நபர்கள் மற்றும் அறக்கட்டளை பெயரில் நன்கொடைவழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.