மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : நாளை உயர் மட்ட குழு விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2018 01:02
மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் தீ விபத்து குறித்து உயர் மட்ட ஆய்வுக்கு மூன்றாம் கட்ட விசாரணையை நாளை (பிப்.,17) துவக்குகிறது.மீனாட்சி கோயிலில் பிப்.,2 இரவு 10:15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்தது. அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் கருகின. தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை ஓய்வு முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், 12 பேர் கொண்ட உயர் மட்ட ஆய்வுக்குழுவை அரசு நியமித்தது. இக்குழு கடந்த பிப்.,7 ல் முதற்கட்ட ஆய்வு நடத்தியது.
இடிபாடுகளை அகற்றுவதற்கு ஏற்ப சிதிலமடைந்த கற் துாண்கள், மேற்கூரைகள் கீழே விழாமல் தடுக்க இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கப்பட்டது. இடிபாடுகள் பாதுகாப்புடன் சிறுக சிறுக அகற்றப்பட்டு வருகிறது. முழுமையாக அகற்றினால் மட்டுமே ஆய்வுக்குழு அடுத்த கட்ட விசாரணையை துவங்கும். அடுத்தகட்ட ஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி விசாரணை நடத்த, ஓய்வு முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் நாளை மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். இக்குழு நான்கு வாரத்திற்குள் ஆய்வு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு ஏற்ப இடிபாடுகளை விரைவாக அகற்றும்படி, கோயில் நிர்வாகத்திடம் கேட்டு கொண்டுள்ளனர்.