நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: பிப்., 20 ல் கன்னிமார் தீர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2018 01:02
நத்தம்:நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா வருகிற பிப்.,19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று மாலை முதல் இரவு முழுவதும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து, சந்தனக்குருப்பு சுவாமி கோயிலை அடைவர். பிப்.,20 அன்று காலை அங்கிருந்து மாரியம்மன் கோயிலுக்கு கன்னிமார் தீர்த்தம் அழைக்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவர். இரவு அம்மன் குளத்தில் இருந்து நகர்வலமாக கம்பம் எடுத்து வந்து கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். மறுநாள் முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர்வலம் செல்கிறார். மார்ச் 6 அன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நடைபெறும். அதிகாலை முதல் பக்தர்கள் அக்னி சட்டி எடுப்பர். பகலில் காந்திநகர் பொதுமக்களால் ஊன்றப்படும், கழுமரத்தில் காமராஜ்நகர் பொதுமக்கள் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். இரவு அம்மன் குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டுன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.