பதிவு செய்த நாள்
17
பிப்
2018
11:02
கூடலுார்: முதுமலை, தெப்பக்காடு ஆதிவாசிகளின் குல தெய்வமான பொம்மதேவர் கோவில் திருவிழா, சிறப்பாக நடந்தது.முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில், யானைபாடி ஆதிவாசி குடியிருப்பு அருகே, மாயாறு ஆற்றை ஒட்டி ஆதிவாசிகளின் குலதெய்வமான பொம்மதேவர் கோவில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும், ஆதிவாசிகள் திருவிழா கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த, 13ல் துவங்கியது. அன்று காலை, விழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், சிறப்பு பூஜைகளும், அய்யனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இரவு, முதல், நேற்று காலைவரை, ஆதிவாசி மக்களின் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று, காலை, 9:00 மணிக்கு கோவிலிலிருந்து ஆதிவாசி மக்கள், ஊர்வலமாக மசினகுடி சாலையை ஒட்டிய மாயாறு ஆற்றுக்கு ஊர்வலமாக சென்றனர். ஆற்றின் கரையோரத்தில், கும்பம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, பூ குண்ட ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் முன்னதாக ஆதிவாசி பெண்கள், குடங்களில் தண்ணீர் ஊற்றி செல்ல, அதன் வழியாக பகதர்கள், ஆதிவாசிகளின் பாரம்பரிய இசையுடன் ஊர்வலமாக கோவில் நோக்கி வந்தனர். கோவில் அருகே, அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்துக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் பூசாரி, தீ குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பக்தர்கள் சிலர் தீ குண்டம் இறங்கி, நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சியில், முதுமலை கள இயக்குனர் சீனிவாசரெட்டி, வனச் சரகர்கள் ராஜேந்திரன், சிவகுமார், மாரியப்பன், வன ஊழியர்கள் கோவில் பூசாரி மாதன், ஆதிவாசி மக்கள் பங்கேற்றனர். பொம்மதேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆதிவாசி மக்களில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தெப்பக்காடு சூழல் மேம்பாட்டுகுழு, அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.