மதுரை : எல்லா மதங்களும் இறைவனை அடையும் பாதைகள், என, மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த 183 வது ஜெயந்தி விழாவில் அதன் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார். ராமகிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி மங்கள ஆரதி, வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், சிறப்பு பூஜை நடந்தன. சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலமும் நடந்தது. விழாவில் சுவாமி கமலாத்மானந்தர் பேசியதாவது: உலகில் தோன்றிய அனைத்து ஆன்மிகச் சிந்தனைகளில் ஓர் ஒட்டுமொத்த உருவமாக வாழ்ந்தவர் ராமகிருஷ்ணர். பக்தி மார்க்கம் குறிப்பிடும் சாந்தம், தாஸ்யம், வாத்சல்யம், சக்கியம், மதுரம் ஆகிய ஐந்து பாவ நிலைகளிலும் அவர் ஆன்மிக பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். எத்தனை மதங்களோ அத்தனையும் இறைவனை அடையும் பாதைகள். இதை ராமகிருஷ்ணர் அடிக்கடி கூறுவதுண்டு. இறைவனை அடைதல் வாழ்வில் லட்சியம். அதற்காக ஆன்மிக சாதனைகள் செய்ய வேண்டும். மக்களை இறைவனாக கருதி தொண்டுகள் செய்ய வேண்டும். மத நல்லிணக்கம் தேவை. இதை ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் தெரிவிக்கின்றன, என்றார்.