நத்தம் மாரியம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2018 10:02
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நத்தம் மாரியம்மன் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாத வளர்பிறையில் முதல் திங்கள் கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கும். தொடர்ந்து 15 நாட்கள் விழா நடைபெறும். அதன்படி நேற்று காலை கணபதி ேஹாமம், அம்மனுக்கு 18 வகையான அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி அங்கி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கோயில் முன்பு அமைந்துள்ள கம்பத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. இன்று காலை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குகின்றனர். வருகிற மார்ச் 6 அன்று பகலில் கழுமரம் ஏற்றத்தை தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் மஞ்சள் நீராட்டு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலத்துடன் விழா நிறைவடைகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பூஜாரிகள் மற்றும் பொதுமக்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர்.