பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
கோத்தகிரி : கோத்தகிரி கொட்டநள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது. கோத்தகிரி கொட்டநள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த மகாலிங்க கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான விழா துவங்கியது. இரவு முழுவதும், விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் கோவிலில் தங்கி ஐயனுக்கு பூஜைகள் நடத்தினர். முக்கிய விழாவான நேற்று முன்தினம், அதிகாலை முதல், ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கோவில் அருகில் உள்ள நீருற்றில் கோவில் பூசாரி தலைமையில், ஊர் மக்கள் முன்னிலையில், பாலபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஊர் மக்கள் சார்பில், பூஜை நடந்தது. விழாவில், ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சியை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பூனுலிடும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர். விழாவில், கொட்டநள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன், காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் முன்னிலையில், பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவை ஒட்டி, கிராமம் விழாகோலம் பூண்டிருந்தது.