முன் வைத்த காலை பின் வைக்காதீர்! எந்த செயலில் இறங்கும் முன்பும் பலமுறை யோசித்து இறங்க வேண்டும். இறங்கிய பிறகு தடைகள் வந்தால், அவற்றை முறியடித்து, வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு மன்னன் தன் படைகளை எதிரிநாட்டுக்கு போருக்கு அனுப்பினான். இருநாடுகளையும் ஒரு பாலம் பிரித்தது. பாலத்தைக் கடந்து சென்ற படைகள் எதிரிப்படையுடன் மோதின. எதிரிப்படை பலமாக இருந்ததால், மன்னனின் படை பாலத்தின் வழியே புறமுதுகிட்டு ஓடி வந்தது. மன்னனுக்கு அவமானம் தாங்கவில்லை. படைத்தலைவனைக் கடிந்து கொண்டான். ""என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. மீண்டும் போ. எனக்குத் தேவை வெற்றி, என அனுப்பினான். மீண்டும் அதே நிலை. பாலத்தின் வழியே படைகள் திரும்பி விட்டன.
மன்னன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான்.""இந்த கோழை படைத்தலைவன் எனக்கு தேவையில்லை. நானே தலைமையேற்று வருகிறேன், புறப்படுங்கள், என்றான். எதிரிநாட்டுக்குள் படைகள் நுழைந்தன. உக்கிரமான போரில் எதிரிகளின் கை ஓங்கியது. படைகள் பாலத்தை நோக்கி ஓடின. மன்னன் யோசித்தான். பாலத்தை குண்டு வீசி தகர்த்துவிட்டான். படைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
எனவே படு ஆவேசமாக போரிட்டனர். எதிரிகள் திண்டாடிப் போனார்கள். மன்னன் எதிரியை சிறைபிடித்தான். அந்த நாடும் அவன் வசமானது. பார்த்தீர்களா! உயிருக்கு ஆபத்து வரும் போது உத்வேகம் வருகிறது. நாம் எதைச் சார்ந்தும் இருக்கக்கூடாது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கி வெற்றி பெற வேண்டும்.
""கலப்பையின் மேல் தன் கைகளை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவன் அல்ல, என்று சொல்கிறது பைபிள். ஆம்...முன் வைத்த காலை பின் வைப்பவன் இறைவனால் வெறுக்கப்படுவான் என்பது புத்தாண்டின் புதிய சிந்தனையாகட்டும்.