பதிவு செய்த நாள்
28
பிப்
2018
05:02
கோவை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, ஆதீனங்கள், சிவாச்சாரியர்கள், அதிகாரிகள், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, பிப்., 13 அன்று, பூச்சாட்டு உற்சவத்தோடு துவங்கியது.அன்று மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிப்., 20 அன்று காலை, பக்தர்கள் முன்னிலையில் விழாக் கொடியேற்றமும், அன்று மாலை அக்னிச்சாட்டும் நடந்தது. அன்றாடம், மாலை நேரத்தில் அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், பறையடிப்பும் நடந்தது. அன்றாடம் மாலை கோவில் அரங்கில், இசை, நடன நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறின. கோவையின் வளர்ச்சிக்கு, கோவில் வளாகத்தில் நுாற்றி எட்டு திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி பிப்., 23 அன்று நடந்தது. இதில் பெண்கள், திருவிளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு கோனியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு, மாங்கல்ய சரடு, வளையல், குங்குமம், மஞ்சள், ரவிக்கை வழங்கப்பட்டது.
இன்று(பிப்.,28)காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ராஜவீதி தேர்நிலைத்திடலிலுள்ள, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளுவிக்கப்பட்டார். பக்தர்கள் தேரிலுள்ள அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்ததுது. பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், சிரவையாயாதீனம், குமரகுருபர சுவாமிகள், எம்.பி.,நாகராஜன், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், கலெக்டர், ஹரிஹரன், மாவட்டவருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், அறநிலையத்துறை இணை கமிஷனர் ராஜமாணிக்கம். இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் ஆகியோர் தேர்வடம் பிடித்து இழுத்து துவக்கினர். ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர்வீதி வழியாக மீண்டும் தேர்நிலையை அடைந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கின. தீயணைப்புத்துறை வாகனங்கள், காவல்துறையின் பாதுகாப்பு வாகனங்கள் தேருக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து சென்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. கோவையின் காவல் தெய்வத்துக்கு விழா நடைபெறுவதால், கோவை நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது.