பதிவு செய்த நாள்
01
மார்
2018
01:03
ஆழ்ந்த ஆன்மிக புலமையால் பக்தர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1935 ஜூலை 18ல் தஞ்சை அருகே இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் சுப்ரமண்யம் மகாதேவ ஐயர். காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியராக இருந்த காஞ்சி மகா பெரியவரால், தனது 19 வயதில் 1954 மார்ச் 22, இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.
பீடாதிபதி: நாற்பது ஆண்டுகள் இளைய பீடாதிபதியாக இருந்த இவர், 69வது பீடாதிபதியாக 1994ல் நியமிக்கப்பட்டார். இவர் சங்கராச்சாரியராக இருந்த காலத்தில், புரோகித தன்மையாலும் ஆழ்ந்த ஆன்மிக அறிவாலும் புகழின் உச்சியை தொட்டார். ஆன்மிகப் பணிகளோடு, சமூகப்பிரச்னைகளிலும் அதிக அக்கறை கொண்டிருந்தார். அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி செய்தது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே மதுரை மீனாட்சி கோயில் பொற்றாமரை குளம் பிரதிஷ்டை. ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றது போன்றவை இதற்கான அடையாளம். ஆன்மிக பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, அதிகளவிலான பக்தர்களின் அன்பை பெற்றார். இன்னலுடன் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு,இன்முகத்துடன் தீர்வு வழங்கினார்.
பின்னடைவு: காஞ்சி கோயில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில், 2004 நவ. 11ல், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டார். 2005 ஜன. 10ல் ஜாமினில் வெளி வந்தார். 2013 நவ. 27ல், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.நெகிழ்ச்சியில் பக்தர்கள் சிதம்பரம் நடராஜருக்கு வருடத்துக்கு ஆறுமுறை அபிஷேகம் நடைபெறும். மாசி சதுர்த்தசி நாளான நேற்று (பிப்.28) நடராஜருக்கு ஆறாவது அபிஷேகம் நடந்தது. அந்த சமயத்தில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மரணம் அடைந்திருக்கிறார் எனக் கூறி பக்தர்கள்
நெகிழ்ந்தனர்.
காஞ்சி மடம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ ஆதி சங்கரரால் கி.மு.,482ல் துவக்கப்பட்டது. இந்த மடத்தின் பீடாதிபதிகள், சங்கராச்சாரியார் என அழைக்கப்படுகின்றனர். தற்போது இம்மடம், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. ஸ்ரீ சங்கர மடம், இந்தியா முழுவதும் செயல்படுகின்றன. இதுவரை 69 சங்கராச்சாரியார்கள் பதவி வகித்துள்ளனர். இதில் 68வது சங்கராச்சாரியாராக இருந்த காஞ்சி மகா பெரியவர் தான் அதிக காலம் பதவிவகித்தவர் என்ற பெருமைக்குரியவர். 70வது பீடாதிபதியாக, இளைய பீடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் பொறுப்பு வகிப்பார்.
முதல் உதவி: சுனாமி, புயல், உத்தரகாண்ட் பெருவெள்ளம் உள்ளிட்ட அனைத்து ேபரிடர் சம்பவங்களின் போதும், காஞ்சி சங்கர மடம் பங்கு கொண்டு நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டன.
இளமையில் ஞானம்: காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெற்றோர், மகாதேவ ஐயர் - சரஸ்வதி அம்மாள். இவரது குழந்தை பருவம் விழுப்புரத்தில் துவங்கியது. தந்தைக்கு ரயில்வேயில் பணி. மகாதேவ ஐயர் சமஸ்கிருத அறிவும், ஆங்கில அறிவும் அதிகமுள்ளவர். துவக்கத்தில் சுப்ரமண்யத்துக்கு (காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்) வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டது. பின் விழுப்புரம் தொடக்கப்பள்ளி ஒன்றில் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலத் தொடங்கினார். பள்ளியில் முதல் மாணவராகத் திகழ்ந்த சுப்ரமண்யத்தின் மீது அந்தப் பள்ளி ஆசிரியருக்கு அளவு கடந்த பிரியம். ஊரும், உலகமும் புகழும் பிள்ளையாக உங்கள் மகன் வரப்போகிறான்" என்று சரஸ்வதி அம்மாளிடமும், மகாதேவ ஐயரிடமும் ஆசிரியர் சொல்வார். இந்த வாக்கு பலித்தது.
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்த புனிதர்:
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமூகத்திற்கான அருளுரை
* பிறருக்கு தீங்கு செய்யாமல் மனிதன் வாழ வேண்டும். சுயநலமின்றி வாழும் போது, அவன் புனித நிலையை அடைகிறான்.
* உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். அவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.
* தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வம். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது கடமை.
* தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
* திருப்தியுடன் வாழ்வதை விட மேலான செல்வம் வேறில்லை. நல்லவர்கள் புகழும் விதத்தில் நம் வாழ்வு அமைய வேண்டும்.
* அடக்கமுடையவன் வாழ்வில் உயர் நிலையையும், அகந்தை உடையவன் தாழ்நிலையையும் அடைவான்.
சமூக அக்கறை
மகாபெரியவர் 1994ல் மறைந்த பின், சமூக நோக்கில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கிய அரசியல் நோக்கமற்ற அமைப்பு ஜன கல்யாண். இதன் சார்பாக குடிசைப் பகுதிகளுக்கு சென்றார். பின் சர்ச்சை கிளம்ப, ஜன கல்யாண் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இவர் காலத்தில் தான் மடத்தின் சார்பில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. 2011-ல் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சியை துவக்கினார். பீடாதிபதியாக, இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பல்வேறு ஆன்மிக பணிகளையும், அறப்பணிகளையும் செய்தார். பல திருக்கோயில் கும்பாபிஷேகங்களையும் நடத்தினார்.
இந்து தர்மத்தின் விருட்சம் சாய்ந்தது
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்தது, உலகத்திலுள்ள இந்து மக்களின் மனதில் மிகுந்த வருத்தத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து தர்மத்தின் மிகப்பெரிய விருட்சம் சாய்ந்து விட்டது. ஆழ்ந்த துக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
சடகோப ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார்
நெற்றிக்கு அழகு திருநீறு: காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் ஆன்மிக அருளுரை
* நெற்றிக்கு அழகு சேர்ப்பது திருநீறு. அதைப் பூசுவதால் அழகும், அறிவும் உண்டாகும்.
* மனிதன் பிறர் மீது காட்டுவது அன்பு. கடவுள் நம் மீது காட்டுவது அருள்.
* சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும்.
* பலனை எதிர்பார்க்காமல் வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களின் தேவை அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார்.
* விரதம் இருப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.
* பக்தி ஆழமானதாக இருந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் போவது உறுதி.
* கடவுளைச் சரணடைவதன் மூலம் விதியின் கடுமை குறையும்.
* எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கிவிட்டு பிறகு துவங்குங்கள்.
* வாரம் ஒருமுறையாவது விரதமிருங்கள். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
* கடவுள் மீது பக்தி செலுத்துவதே மண்ணில் மனிதர்களாகப் பிறந்ததன் ரகசியம்.
* தினமும் வீட்டில் நேரம் ஒதுக்கி வழிபாடு செய்வது அவசியம்.