பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
குடியாத்தம்: குடியாத்தத்தில், 500 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபி?ஷகம் வரும், 4 ல் நடக்கிறது. இதற்காக கோவில் அம்மன் சிரசு மண்டபம் அருகில், யாக சாலை அமைக்க, பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு, 8:00 மணிக்கு, பள்ளம் தோண்டிய போது, மண்ணில் புதைந்திருந்த, மூன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் , நந்தி சிலைகள் எடுக்கப்பட்டன.குடியாத்தம் பழங்கால சிலைகள் ஆய்வாளர் நமச்சிவாயம் கூறியதாவது: கெங்கையம்மன் கோவில் வளாகத்தில் மண்ணில் புதைந்திருந்த சிவன், நந்தி சிலைகள், 500 ஆண்டுகள் பழமையானது. அந்த காலத்தில் கெங்கையம்மன் கோவில் வளாகத்திலேயே சிவனையும் வழிபட்டு வந்துள்ளனர். கெங்கையம்மனுக்கு ஆடு, கோழிகளை பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வந்தனர். பலி கொடுக்கும் இடத்தில், சிவன் வழிபாடு நடத்துவது தெய்வ குற்றம் என்று சில சிவனடியார்கள் கூறியதால், 100 ஆண்டுகளுக்கு முன் சிவனையும், நந்தியையும் அகற்றி அந்த இடத்திலேயே பூமியில் புதைத்து விட்டனர். இதை ஊர் மக்கள் மறந்து விட்டனர். தற்போது யாகசாலை பள்ளம் தோண்டும் போது, சிவன், நந்தி கிடைத்துள்ளது. மீண்டும் இதே இடத்தில் இந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.