பதிவு செய்த நாள்
30
டிச
2011
10:12
தியாக சீலர்களை உலகம் என்றும் மறப்பதில்லை. நெப்போலியன் தன் படைகளுடன் ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்றான். அந்தப் படைகள் ஒரு குளிர்ந்த ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. தண்ணீரில் பனிக்கட்டிகள் மிதந்து வந்தன. ஆற்றைக் கடக்கும் பாலத்தை ரஷ்யர்கள் நொறுக்கிவிட்டனர். தண்ணீருக்குள் இறங்கினால், விறைத்து செத்துப் போவார்கள் வீரர்கள்.என்ன செய்வதென யோசித்த வேளையில், நெப்போலியன் தன் வீரர்களிடம், ""இந்த உலகிலேயே சிறந்தது எது? எனக் கேட்டான்.
பல வீரர்கள் முன்வந்து ""தியாகம் என்றனர். ""சரி... இந்த ஆற்றைக் கடக்க வேண்டும். அதற்காக தியாகம் செய்ய முன் வருகிறவர்கள் யார்? என்றான்.பலவீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.""நீங்கள் தண்ணீரில் இறங்கி வரிசையாக குனிந்து நில்லுங்கள். மூக்கில் தண்ணீர் ஏறாத அளவுக்கு மூச்சடக்கி நிற்க வேண்டும். குளிர் உங்களை வாட்டும். அதை தாங்கிக் கொள்ள வேண்டும், என்றான். அவர்கள் சம்மதித்தனர்.ஆற்றில் இறங்கி முதுகை காட்டி, வரிசையாய் நின்றனர்.
நெப்போலியனின் படைகள், குதிரைகள் எல்லாம் அவர்களின் முதுகின் மேலேறி ஆற்றைக் கடந்தன.மறுகரைக்கு சென்ற நெப்போலியன் திரும்பிப்பார்த்தான். கடக்க உதவிய எந்த வீரனுமே உயிருடன் இல்லை. எல்லாரும் பனியோடு பனியாக உறைந்து கிடந்தார்கள்.
தேசத்திற்காக அந்த வீரர்கள் தியாகம் செய்தது போல, மனிதர்களின் பாவம் முழுவதையும் ஏற்று, உயிரையே கொடுத்தார் இயேசுகிறிஸ்து.தியாகம்... ஒவ்வொரு மனிதனின் ரத்தத்திலும் ஊறியிருக்க வேண்டும். கர்த்தர் நமது பாவங்களை ஏற்று உயிர் தியாகம் செய்தது போல், மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்ற இனிய கொள்கையை புத்தாண்டு கால சிந்தனையாகக் கொள்வோம்.