திருக்கோஷ்டியூரில் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரம்: இன்று மாசி தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2018 11:03
திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்பம் உற்சவத்தை முன்னிட்டு நேற்று வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று தெப்பம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் மாசித் தெப்ப உற்சவம் பிப்.,21ல் துவங்கியது.தினசரி காலையில் பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு காலையில் துவங்கியது. தொடர்ந்து தெப்பக்குள மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 12:40 மணிக்குதெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. தொடர்ந்து பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். தெப்பக்குளம் பகுதியில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இன்று அதிகாலை 5:00 மணிக்கு சயனகோலத்தில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அபிஷேகம் நடந்து பக்தர்கள் தரிசனம் துவங்கும்.
பின்னர்காலை 6:30 மணிக்கு ஏகாந்த சேவை அலங்காரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப் பல்லக்கில் திருவீதி வலம் வருவார். வழியில் பக்தர்கள் பட்டு சார்த்தி பெருமாளை சேவிப்பர். தொடர்ந்து தெப்பக்குளத்தை நோக்கி புறப்பாடு நடைபெறும். பகல் 12:00 மணிக்கு தெப்பக்குளம் அருகே தெப்பமண்டபத்தில் எழுந்தருளி @திருக்கண் சாதித்தல்’ நடைபெறும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி மதியம் 12:40 மணிக்கு பகல் தெப்பம் துவங்கும். ஒரு முறை வலம் வந்த பின்னர் மீண்டும் பெருமாள் தெப்ப மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாசி மகத்தின் பவுர்ணமி மிச்சமான இரவு 10:00 மணிக்கு மேல் பெருமாள் மீண்டும் தெப்பம் எழுந்தருளி இரவு தெப்பம் துவங்கும். நாளைகாலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உற்சவம் நிறைவடைகிறது.