பதிவு செய்த நாள்
02
மார்
2018
12:03
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த பிப்.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் தினமும், கொடிக் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். கடந்த, 27ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, மாமாங்கம் ஆற்றில் இருந்து, கோவிலுக்கு சக்தி அழைத்து வரப்பட்டது.
கடந்த, 28ம் தேதி, காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு செய்தனர். காலை, 10:00 மணிக்கு, 60 அடி நீளம், மூன்று அடி அகலமுள்ள குண்டம் திறக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. அதன்பின், சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். மாமாங்கம் ஆற்றில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்று, காலை ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வந்தனர். கோவில் முன் உள்ள குண்டத்தில், அய்யாசாமி கோவில் பூசாரி ராஜமாணிக்கம் பால் ஊற்றியும், பூக்களை போட்டும் பூஜை செய்தார். முன்னதாக, பிளேக் மாரியம்மன் சிலைக்கு வெண்ெணய் சாத்தப்பட்டது. அதன் பின், பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்துக்கு, ஆட்டு கிடா வெட்டி மூடப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.