பதிவு செய்த நாள்
03
மார்
2018
11:03
திருப்பூர்:திருப்பூரில், வட மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.இரணியன் என்ற அரக்கன் தன்னையே, அனைவரும் கடவுளாக வழிபட வேண்டும் என அழியா வரம் பெற்றிருந்தான். இரணியன் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தார். மகா விஷ்ணுவே கடவுள் என,. அவரையே போற்றி வணங்கி வந்தான். இதையறிந்து, இரணியன் மகன் என்றும் பாராமல், பல வகையிலும் துன்புறுத்தி, பூஜிக்க வற்புறுத்தினான்.மகனையே அழிக்கும் நோக்கத்தில், தனது சகோதரி ஹோலிகா உதவியை நாடினான். ஹோலிகா நெருப்பில் எரியாத வரம் பெற்றதால், பிரகலாதனை தனது மடியில் அமர வைத்து நெருப்பில் இறங்குகிறார். பிரகலாதன் மகா விஷ்ணுவை வணங்கியதால், நெருப்பில் அழியாமல், ஹோலிகா எரிந்து சாம்பலானார்.
இந்த பண்டிகையே, ஹோலிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர், கோபியர்களுடன், ஹோலி விளையாடியதாகவும், வட மாநிலங்களில், குளிர் காலம் முடிந்து, வசந்த காலத்தை வரவேற்கும் வகையிலும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், ஹோலிபண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர், அவிநாசி ரோட்டிலுள்ள "பிரைம் என்கிளேவ் மற்றும் லட்சுமி நகர் உட்பட, வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், ஹோலி பண்டிகையால் களை கட்டியது. தங்களது நண்பர்கள் மேல் வண்ணப்பொடிகளை தூவி, இனிப்பு வழங்கி, ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில், வட மாநில பெண்கள், தாண்டியா நடனமாடினர்.