பதிவு செய்த நாள்
03
மார்
2018
11:03
காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின், 70வது மடாதிபதியாக, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்று கொண்டதாக, சங்கர மடம் அறிவித்துள்ளது. மேலும், மடத்தின் இளைய மடாதிபதி தேர்வு, இப்போதைக்கு இல்லை என, மடத்தின் மேலாளர் சுந்தரேஸ்வரர் ஐயர் தெரிவித்தார். காஞ்சி சங்கர மடத்தின், 69வது மடாதிபதியான ஜெயேந்திரர், வயோதிகம் காரணமாக, உடல்நலக்குறைவால், கடந்த மாதம், 28ல் காஞ்சிபுரத்தில் முக்தியடைந்தார். சங்கர மடத்தில், அவர் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இளைய மடாதிபதியான விஜயேந்திரர், சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார்; இளைய மடாதிபதி தேர்வு இப்போதைக்கு இல்லை, என, சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேஸ்வர ஐயர், நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.
14 வயதில் துறவு: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் உள்ள தண்டலம் கிராமத்தில், 1969, மார்ச் 13ல் பிறந்தார். இயற்பெயர், சங்கரநாராயணன். சிறு வயதிலேயே, வேத பாட சாலையில், வேதங்களை திறமையாக படித்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், அவரது தந்தை முக்குள்ள கிருஷ்ணமூர்த்தியின் பாடசாலையில் வேதம் படித்தார். அங்கு, வேத காவியங்கள் மற்றும் பிற நுால்களையும் படித்தார். தன், 11வது வயதில், மஹா பெரியவரை, மஹாராஷ்ராவில் சந்தித்து ஆசி பெற்றார். 1983 மே 29ல், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், அவருக்கு சந்நியாசம் வழங்கப்பட்டது. அன்று முதல், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என, அழைக்கப்படுகிறார்.