பதிவு செய்த நாள்
03
மார்
2018
12:03
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், தெப்ப, தீர்த்தவாரி உற்சவம் கண்டு, பக்தர்கள் தரிசித்தனர்.ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மாசி மக தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், பகலில், சுவாமி சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, இரவு, சிறப்பு அலங்கார சுவாமி, தேவியருடன், கோவிலிலிருந்து புறப்பட்டு, புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தை அடைந்தார்.இரவு, 9:15 மணிக்கு, அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று சுற்றுகள் வலம் வந்து, வீதியுலா சென்றார்.
நேற்று காலை, கோவிலில் சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, கருட வாகனத்தில், கோவிலிலிருந்து சுவாமி புறப்பட்டு, மாட வீதிகள் வழியே கடந்து, கடற்கரையை அடைந்தார்.வழிபாட்டிற்கு பின், 9:30 மணிக்கு, சுவாமியின் அம்சமான சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார். பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, கடலில் நீராடினர். மீனவ பகுதியில் வீதியுலா சென்று, கோவிலை அடைந்தார். தொல்லியல்துறை கோவிலின், ஆதிவராக பெருமாள், திருவண்ணாமலை மாவட்ட, படவேட்டம்மன் ஆகியோரும் புனித நீராடினர்.