பதிவு செய்த நாள்
03
மார்
2018
12:03
ஸ்ரீவில்லிபுத்துார்:பங்குனி என்றாலே அம்மன்கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இதிலும் தென்மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் தான் உறவுகள் ஒன்று கூடி, மூன்று நாள் முதல் 12 நாட்கள் வரை நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்று மகிழ்வர். பள்ளி விடுமுறை நாட்களில் இத்திருவிழாக்கள் வருவதால், பெரும்பாலான மக்கள் எங்கிருந்தாலும் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்து, கோயில் திருவிழாக்களில் பங்கேற்பர். இதில் வேண்டுதல் மற்றும் நேர்த்திகடன் போட்டிருந்தவர்கள், அம்மனுக்கு, குழந்தை உருவங்கள், திருமண தம்பதி, கை மற்றும் கால்கள், தவழும் குழந்தை, தொட்டில்கள் போன்ற மண்ணில் தயாரிக்கபட்ட உருவங்களை நேர்த்திகடனாக செலுத்துவர். இத்தகைய உருவங்களை கடந்த 15 ஆண்டாக தயாரித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் மாதா நகரை சேர்ந்த சின்னராமசாமி குடும்பத்தினர். இவர் குடும்பமாக அமர்ந்து, 20க்கு மேற்பட்ட களிமண் சிற்பங்களை தயாரித்து, விருதுநகர் பராசக்தி, சிவகாசி பத்ரகாளியம்மன், அருப்புகோட்டை மாரியம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில்களின் பங்குனி விழாவிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்புக்கு 99434 52665.
தயாரிப்பதில் மகிழ்ச்சி: ஐப்பசியில் துவங்கி மாசி கடைசி வரை அதிகபட்சமாக 4 முதல் 5 ஆயிரம் உருவங்கள் செய்வோம். இதை செய்யும் நாட்களில் பத்து நிமிடம் ஓய்வு எடுத்தாலும் மண்காய்ந்து, உருவங்கள் தயாரிக்கமுடியாத நிலை ஏற்படும் என்பதால், சாப்பிடகூட நேரம் இல்லாமல் வேலை செய்வோம். அதிக லாபம் இல்லை என்றாலும், அம்மன் நேர்த்திகடனுக்காக தயாரிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். -சின்ன ராமசாமி ,ஸ்ரீவி.,