பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
திருப்பூர்;கொங்கு நாடு பகுதியான கருவூரில் அவதரித்தவர் எறிபக்த நாயனார்; ஆனிலை சிவபெருமானுக்கு சேவையாற்றி வந்தார். சிவனடியார்களுக்கு துன்பம் இழைப்போரை, பரசு எனும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதற்காக, எப்போதும் கையில் மழுப்படை வைத்திருப்பார். கோவிலில், சிவமாமியாண்டார் என்ற முதியவர், புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். ஒருமுறை நந்தவனத்தில் இருந்து பூ பறித்து, பூக்கூடையுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, அரசனின் பட்டத்து யானை, முதியவர் கையில் இருந்த பூக்கூடை யை பறித்து, தெருவில் வீசியது. பூக்கள் சிதறியதால் கோபமான சிவமாமியாண்டார், யானையை குச்சியால் தாக்க ஓடினார்.
முதுமையால் செல்ல முடியாமல் தவித்து அழுதார். அங்கு வந்த எறிபக்த நாயனார், கோபமாக சென்று யானையின் தும்பிக்கையையும், ஐந்து பாகன்களையும் வெட்டிச் சாய்த்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த சோழ மன்னர், சம்பவ இடத்துக்கு வந்து, எறிபக்தரிடம் மன்னிப்பு கேட்டு, உடைவாளை கொடுத்து, தன்னை தண்டிக்குமாறு கூறினார். இவ்வளவு தன்மை வாய்ந்த அரசனின் யானையை கொன்றோமே என எண்ணி எறிபக்தர், தனது கழுத்தை அறுக்க எத்தனித்தார். உடனே, அரசன் பாய்ந்து தாவி, தடுத்தார். அப்போது, சிவபெருமான் அசரீதியாக ஒலித்து, தமது திருவிளையாடலே இது என்று அறிவித்தார். யானையும், பாகன்களும் மீண்டு வந்தனர்; பூக்களும், பூக்கூடைக்கும் வந்தன.எறிபக்தர், யானையின் மீது அமர்ந்து சென்று, சிவபெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வழிபட்டார். சிவ பக்தர்களுக்கு இடையூறு நேர்ந்த போதெல்லாம் விரைந்து சென்று தடுத்த எறிபக்தர், சிவகணங்களின் தலைவர் பதவியை பெற்று வீடு பெற்றார்.
அர்த்தஜாம பூஜை: சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உள்ள நாயன்மார்களில், எறிபக்த நாயனாருக்கு நேற்று குருபூஜை நடந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.