பதிவு செய்த நாள்
03
ஜன
2012
10:01
முஸ்லிம் சொத்துக்களை கண்காணிக்க, நிர்வகிக்க, வக்பு வாரியம், தர்கா கமிட்டிகள் உள்ளன; கிறிஸ்தவர்கள், தங்கள் மத அமைப்புகளையும், சொத்துக்களையும், தாங்களே நிர்வகித்துக் கொள்கின்றனர். இதுபோல், இந்து கோவில்கள் மற்றும் சொத்துக்களை, இந்து அமைப்புகளே நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்து அமைப்புகள் மத்தியில், நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போது கோவில்களின் வருமானம் அதிகரித்து வரும் நிலையில்; இந்து சமுதாயத்தினர் இடையே, அந்த வருமானத்தை வைத்து, மற்ற மதத்தினரை போல் கல்வி, ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற பணிகளை செய்யலாமே என்ற எண்ணம் வலுவடைந்து உள்ளது.
உண்டியல் போதும் : இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது: மதச்சார்பற்ற ஒரு அரசு, ஒரு மதத்தின் அறநிலையங்களை மட்டும் எப்படி நிர்வகிக்கலாம்? அது, மதச்சார்பின்மைக்கு எதிரானது. சொந்த இடத்தில் நாம் விநாயகர் சிலை வைத்தால், பூஜை செய்தால், கும்பாபிஷேகம் நடத்தினால், அரசு வராது. ஆனால், உண்டியல் வைத்தால், உடனே வந்துவிடும். எனவே, அரசின் நோக்கம் உண்டியல் தான். கோவில் நிர்வாகம், தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர், சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். அதில் இருந்து குத்தகையை வசூலிப்பதில் அக்கறையில்லை; நகைகளை பாதுகாக்க துப்பில்லை. ஆனால், வழிபாட்டில் தலையிடுகின்றனர். என்ன மொழியில் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். அரசு பட்ஜெட்டில் இருந்து, கோவில்களுக்கு நயா பைசா கூட தருவதில்லை. இவ்வாறு, இல.கணேசன் கூறினார்.
பிழைப்பு நடத்த... : மேலும் அவர் கூறியதாவது: ஆட்சிக்கு வரும் கட்சியைச் சேர்ந்தவர்களில், 20 சதவீதம் பேருக்கு மட்டுமே, அமைச்சர் பதவி தர முடியும். ஒரு சிலருக்கு, வாரியங்கள் தரலாம். மற்ற கட்சிக்காரர்கள் பிழைப்பு நடத்த, பல்லாயிரக்கணக்கான கோவில்களில் அறங்காவலர் பதவி உருவாக்கப் பட்டு, பதவி வழங்கப் படுகிறது. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, அறங்காவலர்களாக நியமிக்கப் படுகின்றனர். கோவில் வருமானத்தில், அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரக்காரர்கள், பூஜை சாமான்களுக்கு, 15 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. மீதம் 85 சதவீதம், நிர்வாக அதிகாரிகளின் சம்பளம், அவர்களது அறைக்கான, "ஏசி வசதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கே செலவிடப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்
தலையிட முடியாது : வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் ஹாஜா மஜீத் கூறியதாவது: வக்பு வாரியத்துக்கும், மற்ற நிர்வாகங்களுக்கும், ஏராளமான வேறுபாடுகள் உண்டு. முஸ்லிம் சொத்துக்களை நிர்வகிப்பதில், அரசு தலையிட முடியாது. வக்பு வாரியத்தில், 13 உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், முத்தவல்லிகள் ஆகிய பிரிவுகளில், தலா இரண்டு பேரும், மதகுருமார்கள், வி.ஐ.பி.,க்கள் என, அரசால் நியமிக்கப் படும் நான்கு பேரும், ஒரு அரசு பிரதிநிதியும் தேர்வு செய்யப் படுகின்றனர். இந்த 13 பேரில் இருந்து ஒருவர், வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யப் படுகிறார். இது, ஜனநாயக அமைப்பு. என்ன நோக்கத்திற்காக வக்பு வாரியம் அமைக்கப் பட்டதோ, அது நிறைவேறி வருகிறது. முஸ்லிம் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மற்றபடி, இந்து கோவில் நிர்வாகம் பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை இவ்வாறு, ஹாஜா மஸ்ஜித் கூறினார்.
அரசிடமே இருக்கட்டும் : திருத்தணி முருகன் கோவில் நிர்வாக அதிகாரி தனபால் இதுகுறித்து கூறியதாவது: கோவில் வருவாயில் இருந்து அரசுக்கு, 8 முதல், 14 சதவீதம் கட்டணம் மட்டுமே செலுத்தப் படுகிறது. மற்றபடி, கோவில் வருவாய், கோவில் திருப்பணிகளுக்கும், உபரி வருவாய், இதர கோவில்களுக்குமே பயன்படுத்தப் படுகிறது. அரசு ஒவ்வொரு ஆண்டும், மூன்று கோடி ரூபாய் மானியம் தருகிறது. சமீபகாலமாக, மத்திய, மாநில அரசுகள், சுற்றுலா நிதியை கோவில்களுக்கு தருகின்றன. 12வது நிதிக்குழு, 50 கோடி ரூபாய் தந்தது. 13வது நிதிக்குழுவிடம், 750 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். இவ்வாறு, தனபால் கூறினார். மேலும், ""அரசு அதிகாரம் இருக்கும்போதே, கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பை கட்டுப் படுத்துவது, மீட்பது சிரமமான காரியமாக இருக்கிறது. அதிகாரம் இல்லாத தனி அமைப்பிடம் கொடுத்தால், நிர்வகிப்பது மிகவும் சிரமம். எனவே, கோவில்கள், அரசின் கட்டுப் பாட்டில் இருப்பது தான் நல்லது, என்றார்.
அறக்கொடை வாரியம் : தமிழகத்தில், 1925ல், இந்து சமய அறக்கொடைகள் வாரியம் நிறுவப் பட்டது. இது, 51ம் ஆண்டு கலைக்கப் பட்டு, கோவில்கள், அறக்கட்டளைகள், மடங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொறுப்பு, அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அரசுத் துறையாக இயங்கி வருகிறது. தமிழகத்தில், 1,900 அறக்கட்டளைகள், 113 மடங்கள் உட்பட, 38,481 கோவில்கள் உள்ளன. இந்த கோவில் வருமானங்களில் இருந்து, அன்னதான திட்டம், ஒருகால பூஜை திட்டம், இலவச திருமணங்கள், ஆகம, நன்னெறி வகுப்புகள் திட்டம் ஆகியவற்றை, இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. யானைகள் நல்வாழ்வு முகாம் திட்டத்திற்கும், கோவில்களின் நிதி பயன்படுத்தப் படுகிறது. இந்து கோவில்களுக்குச் சொந்தமான, 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 462 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பில் உள்ளது. 1 லட்சத்து, 23 ஆயிரம் குத்தகைதாரர்கள் உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், 5 கலை அறிவியல் கல்லூரிகள், 1 தொழில்நுட்ப கல்லூரி, 15 மேல்நிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட, 50 கல்வி மையங்களும் இயங்கி வருகின்றன.
யாருக்கு அதிகாரம்? : முன்பெல்லாம், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பை மீட்க, "ரெவென்யூ ரெகவரி சட்டப்படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கே அதிகாரம் வழங்கப் பட்டிருந்தது. இப்போது, அந்த அதிகாரம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், துணை ஆணையர் போன்ற அதிகாரிகளுக்கே வழங்கப் பட்டுள்ளது. இந்த மட்டத்தில் உள்ள அதிகாரிகளே, நோட்டீஸ் கொடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற முடியும்; வாடகை செலுத்தாத கடைகள், வீடுகளுக்கு சீல் வைக்க முடியும்.
டாப் 10 கோவில்கள் : அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் கோவில் ரூ/கோடி
1 தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2 மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5 அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6 அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8 ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9 தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10 தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.