ராமேஸ்வரம் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பின் ஒலித்த முரசு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2012 10:01
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளுக்குப்பின் கோயில் நடை திறப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் மீண்டும் முரசு கொட்டும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பல நூற்றாண்டுகளாக கோயில் நடை திறப்பதை பக்தர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இரண்டு பெரிய முரசுகளை கொட்டுவது வழக்கத்தில் இருந்தது. தொன்று தொட்டு வந்த இந்த பழக்கம் இடையில் நிறுத்தப்பட்டது. இதனால் 300 ஆண்டுகள் பழமையான இரண்டு முரசுகளும் சேதமடைந்து மூலையில் போடப்பட்டது. கடந்த 2003ல் கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், இரண்டு முரசுகளையும் சீர் செய்து மீண்டும் முரசுகளை ஒலிக்க செய்தார். இதுவும் இரண்டு ஆண்டிற்குள் நிறுத்தப்பட்டது. முரசு கொட்டுபவர் பணி ஓய்வு பெற்றதால் தொழில் தெரிந்த வேறு நபர் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய இணை கமிஷனர் ராஜமாணிக்கம், நடவடிக்கை எடுத்தார். ஐந்து ஆண்டுகளுக்கு பின் நேற்று முதல் கோயில் நடை திறப்பின்போது முரசு கொட்டும் சேவை மீண்டும் துவங்கியது. கோயில் மிருதங்க வித்வான் முருகன், முரசு கொட்டி கோயில் நடை திறப்பை தெரிவித்தார். இணை கமிஷனர் கூறியதாவது: பழமையான முரசுகளில் ஒன்று சேதமடைந்துள்ளதால், தற்போது ஒரு முரசு மட்டும் கொட்டப்படுகிறது. வழக்கமாக அதிகாலை 4 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு முரசு கொட்டுவது தொடரும். தற்போது மார்கழி மாதம் ஆனதால் அதிகாலை 3 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் முரசு கொட்டப்படுகிறது, என்றார்.