திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஐந்து மூலவர்களையும் தரிசனம் செய்யும் சிறப்பு கட்டணத்தில் நிர்வாகம் மாற்றம் செய்தது. இக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் மூலவர்கள் மலை அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு கட்டண டிக்கெட் பெறுபவர் மட்டுமே ஐந்து மூலவர்களையும் தரிசிக்க முடியும். கட்டணமில்லாத பக்தர்கள் மூன்று மூலவர்களை மட்டும் தரிசிக்க முடியும். சிறப்பு கட்டணமாக நபர் ஒருவருக்கு சாதாரண நாட்களில் ரூ. 10ம், விழா காலங்களில் ரூ. 20ம், அதிவிரைவு தரிசனத்திற்கு ரூ. 100ம் வசூலிக்கப்பட்டது. சிறப்பு தரிசன பக்தர்கள் மடப்பள்ளி மண்டபம், கோவர்த்தனாம்பிகை சன்னதி வழியாக மூலஸ்தானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ரூ.100 கட்டண தரிசன பக்தர்கள் மகா மண்டபம் வழியாக, மூலஸ்தானத்தில் சிறப்பு தரிசன பக்தர்களுடன் சேர்த்து அனுப்பப்பட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயக்கமுற்றனர். பின் ரூ. 10 கட்டணம் ரத்து செய்யப்பட்டது. புத்தாண்டு முதல் ரூ. 20 மற்றும் ரூ. 100 சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, நபர் ஒருவருக்கு ரூ. 50 வசூலிக்கப்பட்டது. கட்டணம் எவ்வளவு வசூலித்தாலும், சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்வதில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். துணை கமிஷனர் செந்தில்வேலவன் கூறுகையில், ""குடவரைக்கோயிலாக இருப்பதால், மூலவர்களை தரிசிக்கும் இடம் சிறியது. சிறப்பு டிக்கெட் பெறும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.