பதிவு செய்த நாள்
23
மார்
2018
01:03
ஒசூர்: ஓசூர் அடுத்த, பாகலூரில் மாரியம்மன் திருவிழாவின்போது, சாய்ந்த தேரை அகற்றும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. ஓசூர் அடுத்த, பாகலூரில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. தேர்த்திருவிழா கடந்த நான்கு நாட்களுக்கு முன், கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. பாகலூர் பஸ் ஸ்டாண்டு வழியாக, தேர் வலம் வந்த போது, இடதுபுற அச்சு மரம் லேசாக உடைந்து, சாய்ந்தபடி தேர் சென்றது. அதிர்ஷ்டவசமாக, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. தேரில் இருந்த, கிராம தேவதை மாரியம்மன் சிலை இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ராட்சத கிரேன் உதவியுடன், தேரினை முழுவதுமாக கழற்றி, அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.