பதிவு செய்த நாள்
26
மார்
2018
12:03
ஊத்துக்கோட்டை: வேதநாராயண சுவாமி கோவிலில், ஐந்து நாட்கள் நடைபெறும் சூரிய பூஜை விழாவில், இன்று, சூரியனின் கதிர்கள் மூலவரின் பாதத்தில் விழும் காட்சியை காண திரளான பக்தர்கள் கூடுவர்.ஊத்துக்கோட்டை அடுத்த, நாகலாபுரம் கிராமத்தில் உள்ளது வேதநாராயண சுவாமி கோவில். கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில், மூலவர் உடலின் மேல்பாதி மனித உருவாகவும், கீழ்பாதி மீன் உருவமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி மாதம் நடைபெறும் சூரிய பூஜை விழா பிரசித்தி பெற்றது. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் முதல் நாள் மூலவரின் பாதத்திலும், இரண்டாவது நாள் திருமேனியிலும், மூன்றாவது நாள் நெற்றியின் மீதும் விழும். இந்த காட்சியை காண ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.இவ்விழா, நேற்று முன்தினம் மாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து, மகா தீபாராதனையுடன் விழா துவங்கியது.கோவிலின் எதிரில் உள்ள குளத்தில் தெப்ப திருவிழா நடந்தது. இதில், உற்சவர் வேதநாராயண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் குளத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், உற்சவர் நாகலாபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியே வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கியநாளில், முதல் நாளான இன்று, மாலை, 4:30 மணி முதல், சூரியனின் கதிர்கள், கோவில் முன் கோபுரத்தின் வழியே, 630 அடி துாரத்தில் உள்ள மூலவரின் பாதத்தை நோக்கி செல்லும்.நாளை, தொப்புளிலும், நாளை மறுதினம், 28ம் தேதி நெற்றியிலும் விழும். ஒவ்வொரு நாளும், இரவு, 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர், குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.