பதிவு செய்த நாள்
26
மார்
2018
11:03
பொள்ளாச்சி:இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் வேல் சங்கமம் யாத்திரை சார்பாக பொள்ளாச்சி வந்த மருதவேலுக்கு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.தமிழகத்தின் வளம், வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்காக, இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில், வேல் சங்கமம் ரத யாத்திரை நடத்துகிறது.
இதில், முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்த வேல்கள், ஆறு ரதங்களில் தமிழகம் முழுக்க உள்ள முக்கிய ஆலயங்களுக்கு யாத்திரையாக கொண்டு செல்லப்படும். பிறகு, வரும் 29ம் தேதி மதுரையில் ஆறு ரதங்களும் ஒன்றாக சந்திக்கும் வகையில் யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, திருப்பரங்குன்றத்தில் இருந்து குமரவேல், திருச்செந்துாரில் இருந்து சத்ரு சம்ஹாரவேல், பழநியில் இருந்து மருதவேல், சுவாமிமலையில் இருந்து ஞானவேல், திருத்தணியில் இருந்து தணிகைவேல், பழமுதிர்சோலையில் இருந்து சோலை வேல் பூஜிக்கப்பட்டு, யாத்திரை மேற்கொண்டுள்ளன. பழநியில் இருந்து மருதவேலுடன் வேல் சங்கம யாத்திரை ரதம் நேற்று பொள்ளாச்சி வந்தது. ரதத்தை பா.ஜ.,வினர் மற்றும் இந்து அமைப்பினர் வரவேற்றனர்.சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில் ரதம் மற்றும் வேலுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சியில் புறப்பட்ட ரதம், கோவை, மருதமலை, அன்னுார், அவினாசி, திருமுருகன்பூண்டி வழியே யாத்திரை மேற்கொள்ளும் என ரத யாத்திரைக்குழுவினர் தெரிவித்தனர்.