பதிவு செய்த நாள்
27
மார்
2018
12:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, சென்னை ஐ.ஐ.டி., குழுவினர், நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இக்கோவிலில், பிப்., 2 இரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்தது. 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகின. தீ விபத்து குறித்து பொதுப்பணித்துறை ஓய்வு முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், 12 பேர் கொண்ட உயர் மட்டக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.இக்குழு பரிந்துரைப்படி, வீர வசந்தராய மண்டபத்தின் எஞ்சிய பகுதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள பழமையான கற்துாண்களின் ஸ்திரத்தன்மை குறித்து, சென்னை ஐ.ஐ.டி., புவியியல் வல்லுனர் கற்பகம் தலைமையிலான பத்து பேர் குழு நேற்று ஆய்வை துவக்கியது. புனரமைப்பு பணிக்காக, நாகர்கோவில் மாவட்டம், மார்த்தாண்டம் மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் இருந்து பெறப்படும் கற்துாண்களின் ஸ்திரத்தன்மை குறித்தும், இக்குழு ஆய்வு செய்யும்.