பதிவு செய்த நாள்
27
மார்
2018
03:03
ஒரே இடத்தில் ஐந்து சன்னதி திருப்பரங்குன்றம் மலையைக் குடைந்து கற்பக விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, பெருமாள் ஆகிய ஐவருக்கும் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணியசுவாமி என்னும் பெயருடன் முருகன் அருள் பாலிக்கிறார். அமர்ந்த நிலையிலுள்ள இவரது இடப் பக்கம் தெய்வானை, வலதுபக்கம் நாரதர் உள்ளனர். சூரியன், சந்திரன் அருகில் உள்ளனர். மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்தில் துர்க்கை தனி சன்னதியில் காட்சியளிக்கிறாள். அவளைச் சுற்றி பூத கணங்கள் உள்ளன. தேவ தூதர்கள் வாத்தியம் இசைத்த நிலையில் உள்ளனர். கரும்புடன் கணபதி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் கற்பக விநாயகர் தனி சன்னதியில் இருக்கிறார். கையில் அங்குசத்திற்குப் பதிலாக கரும்பு ஏந்தியிருப்பது மாறுபட்ட அமைப்பு.
தம்பியின் திருமணத்தலம் என்பதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கணபதி கரும்புடன் இருப்பதாக சொல்வர். நந்தி இடத்தில் நாராயணன்
இது முருகன் கோயில் என்றாலும், சிவனே மூலவராக இருக்கிறார். அவரை “சத்தியகீரீஸ்வரர்” என்று அழைக்கின்றனர். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இவர் எதிரில் பவளக்கனிவாய் பெருமாள் காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, மதங்க முனிவர் உள்ளனர். சிவனுக்கு எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் நாராயணர் இருப்பதால் இவரை “மால் விடை” என்கின்றனர். “மால்” என்றால் “திருமால்”. “விடை” என்றால் நந்தி. திருமால் நந்தீஸ்வரர் அம்சமாக இருக்கிறார்.
சத்தியகிரீஸ்வரருக்கு பின்புறத்தில் சோமாஸ்கந்தர் (சிவன், பார்வதியின் நடுவில் முருகன் அமர்ந்த கோலம்) புடைப்பு சிற்பம் உள்ளது. திசைக்கு ஒரு காட்சி திருப்பரங்குன்றம் மலைக்கு திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசல தலம், விட்டணு துருவம், கந்த மாதனம், கந்த மலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங் குன்றம், சுவாமிநாத புரம், முதல்படை வீடு என்று பல பெயர்கள் உண்டு. மலையின் வடக்கு பகுதி கைலாயம் போலவும், கிழக்கு முகம் பெரும் பாறை யாகவும், தெற்கில் பெரிய யானை படுத்திருப்பது போலவும், மேற்கில் சிவலிங்கம் போலவும் காட்சியளிக்கிறது. சன்னியாசி கிணறு இங்குள்ள மடப்பள்ளி மண்டபம் அருகில் சன்னியாசி கிணறு உள்ளது. இந்த கிணற்று தீர்த்தமே தினமும் அபிஷேகத்துக்கு எடுக்கப்படுகிறது. ஐப்பசியில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் சன்னியாசித் தீர்த்தம் அருந்தி, விரதம் துவங்குவது மரபு.