பதிவு செய்த நாள்
28
மார்
2018
01:03
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்களிடம் திருட்டு, கவனச் சிதறல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் மொபைல்போன்கள் செயல்படாதவாறு, ’ஜாமர்’ கருவி பொருத்தப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், மொபைல்போனுடன், மூலவர் உட்பட அனைத்து சன்னதிகளிலும் சென்று தரிசிக்கின்றனர். இந்நிலையில், மூலவர் அறையில் மட்டும், அனைத்து மொபைல்போன்கள் செயல்படாதவாறு ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து சன்னதிகளிலும், கோவில் வளாகத்திலும், மொபைல்போன்கள் பேசும் வசதி உள்ளது. இந்நிலையில், சில பக்தர்கள், கோவில் வளாகத்திலேயே மொபைல்போனில், பேசி வருவதால், சக பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், அலைபேசியின் மூலம் பக்தர்கள் பேசிக் கொண்டு வருவதால், பக்தர்கள் இடையே கவனச் சிதறல் ஏற்பட்டு, சில நேரங்களில் நகை, பணம் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனையடுத்து, பக்தர்கள் நலன் கருதி, கோவில் நுழைவு வாயிலில் இருந்து, அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் மொபைல்போன்கள் செயல்படாதவாறு, நேற்று ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்தர்களின் நலன் கருதியும், திருட்டு, கவனச் சிதறல், மனஅமைதி கெடுதல் போன்ற செயல்களை தடுப்பதற்கு, கோவில் வளாகத்தில் மட்டும், அனைத்து மொபைல்போன்கள் செயல்படாதவாறு, ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மலைக்கோவில் மற்றும் மாட வீதிகளில், வழக்கம் போல் மொபைல்போன்கள் செயல்படும். இதனால், பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.