பதிவு செய்த நாள்
04
ஜன
2012
10:01
திருத்தணி : முருகன் கோவிலில் நடந்த திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய மூன்று நாட்களில் மட்டும், 33 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. திருத்தணி முருகன் கோவில் படித்திருவிழா கடந்த, 30ம் தேதி துவங்கியது. மறுநாள், 31ம் தேதி திருப்படி திருவிழா, ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு தரிசன விழா நடந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக உண்டியலில் அளித்தனர். சில பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய, 25, 50 மற்றும், 100 ரூபாய் சிறப்பு டிக்கெட் பெற்று, மூலவரை தரிசித்தனர். மூன்று நாட்கள் நடந்த விழாவில், பக்தர்கள் அளித்த காணிக்கை, மலைக்கோவில் வள்ளி மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் தனபால் முன்னிலையில் எண்ணப்பட்டது. உண்டியலில், 16 லட்சத்து, 47 ஆயிரத்து, 741 ரூபாய் ரொக்கம், 22 கிராம் தங்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளன. சிறப்பு தரிசன டிக்கெட், மலைக்கோவிலுக்கு செல்வதற்கு வாகனங்களுக்கு நுழைவு கட்டண டிக்கெட் விற்பனை மூலம், 16 லட்சத்து, 69 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு டிக்கெட் விற்பனையில், 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. மேலும், உண்டியல் வசூலை விட, இக்கட்டணம் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.