பதிவு செய்த நாள்
04
ஜன
2012
11:01
கடலூர்: புயலால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன எங்களுக்கு, தெய்வமாக வந்து உதவிய, ஸ்ரீ சத்ய சாய்சேவா நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று, நிவாரண பொருட்களை பெற்ற பயனாளிகள் தெரிவித்தனர்.புயலால் பாதிக்கப்பட்ட, கடலூர் அருகே உள்ள கன்னிமா நகரில், தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய்சேவா நிறுவனங்கள் சார்பில், நிவாரண பொருட்கள் (அமிர்தகலசம்) வழங்கப்பட்டன. "தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், அறக்கட்டளை உறுப்பினர் பூபால், பொறுப்பாளர் சந்திரன், சேவாதள தொண்டர் ராவ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடலூர், தேவனாம்பட்டினம், திடீர்குப்பம், அம்பலவாணன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அத்தியாவசியத் தேவையான நிவாரண பொருட்கள் (அமிர்தகலசம்) அடங்கிய பார்சலை, சேவாதள தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட கன்னிமா நகரைச் சேர்ந்த கோபால் கூறுகையில், "கடலூர் மாவட்டம் இதுவரை பார்க்காத புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 5 நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். எங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை. விளக்கேற்ற மண்ணெண்ணெய் கூட இல்லை. இருட்டிலும், குளிரிலும் நடுங்கிக் கிடந்தோம். அரசு அதிகாரிகள் இந்த ஊர் பக்கமே தலைகாட்டவில்லை. எங்களிடம் ஓட்டு வாங்கிச் சென்ற அரசியல்வாதிகள் எல்லாம் கூட எங்களை வந்து எட்டிப்பார்க்கவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், தெய்வமாக வந்து எங்களுக்கு படுக்கப் பாயும், குடும்பத்திற்குத் தேவையான பொருட்களையும், ஸ்ரீசத்ய சாய் சேவா சார்பில் வழங்கியுள்ளதை நினைத்து பெருமை அடைகிறோம் என்றார்.